லேசான தடுக்கி விழுந்தாலே நொறுங்கும் எலும்புகள். சின்ன சின்ன அடிகளுக்கு கூட தாங்காமல் எலும்புகள் உடையும் அபாயம் என இந்தியாவில் பெரும்பாலோனோரை பாடாய் படுத்துகிறது எலும்பு தேய்மானம்.
ஆஸ்டியோபொரோசிஸ் என்று மருத்துவ உலகம் பெயர் சூட்டியுள்ள இந்த நோய்க்கு 2013ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மட்டும் சுமார் 3 கோடியே 60 லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பலவீனமடையும் எலும்புகள்
எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே ஆஸ்டியோபொரோசிஸ் என்று கூறுகிறது உலகச் சுகாதார மையம். ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. இந்தியாவில் நகர்ப்புறப்பகுதிகளில் வாழும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரி ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருக்கிறது. இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் டி குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மெனோபாஸ் பருவம்
இந்தியாவில் குறிப்பாக புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸிற்கு நோய்க்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.
வைட்டமின் டி குறைபாடு
கிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் ஆஸ்டியோபொரோசிஸிற்கு ஒரு முக்கியக் காரணம். கால்சியம் சத்து குறைவு மட்டுமல்ல வைட்டமின் டி குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, சூரிய ஒளியிலிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலைப்பளு இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது ஆகியவை மற்றும் மரபுக்காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வருமுன் காப்போம்
குறிப்பாக குந்தைகள் இன்று குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில்களில், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பாஸ்பேட் சத்து அதிகம். பாஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்குச் செல்லும் கால்சியம் சத்து கடுமையாக குறையும். எனவே குழந்தைகள் இந்த குளிப்பானங்களை குடிப்பதை ஊக்குவிக்கக் கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே இதனை கணிக்க முடியாமல் போவதோடு, தவறான கணிப்புகளுக்கும் இடமளிக்கும் அபாயமும் இதில் உள்ளது. மேலும் எலும்பு தேய்மானம் துவங்கிவிட்டால் அதனை மீண்டும் பலம்பெறச் செய்வது கடினம். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.