திருப்பதி போல் விளங்கும் மலை நாட்டுத் திருப்பதி

[carousel ids=”60775,60776,60777,60778″]

தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால்

நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று

யாவரும் வந்து வணங்கும் பொழில் திருவாறன்விளை அதனை

மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்என்னும் என் சிந்தனையே.’

– நம்மாழ்வார்

உள்ளூரில் ஆரமுளா என்றழைக்கப்படும் இடத்தில் உள்ள இக்கோயில் மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகும். செங்கண்ணூருக்குச் சுமார் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. செங்கண்ணூரிலிருந்து செல்லும் பாதையெங்கும் பம்பா நதி பரவசமாகக் காட்சியளிக்கிறது.

தலபுராணம்

தன்னிடமிருந்து வேதங்களைப் பிடுங்கிச் சென்ற மதுகைடபர்களை வதம் செய்து வேதங்களை மீட்கக் கோரி பிரமன் இங்கு தவம் இருந்தார் என்பது இத்தலபுராணம்.

வனவாசத்தின்போது இங்குள்ள கானகங்களில் மறைந்து வாழ்ந்த பஞ்சபாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பெருமாள் கோயிலைப் புதுப்பிக்கும் பணி செய்தனராம். அவர்களில் மூன்றாமவனான அர்ஜுனன் புதுப்பித்த கோயில் இது என்பர். இதன் அருகில் உள்ள வன்னி மரத்தில்தான் அர்ஜுனன் தன் போராயுதங்களை மறைத்து வைத்திருந்தான் என்றும் சொல்வதுண்டு.

பாரதப் போரில், கர்ணன் நிராயுதபாணியாக இருந்தபோது அவனைக் கொன்ற பாவத்தைக் கழுவ இங்கு வந்து அர்ஜுனன் தவம் செய்து தோஷம் நீங்கப் பெற்றான். இத்தலத்துப் பெருமாள் அவனுக்குப் பார்த்தசாரதியாகவே காட்சி தந்தார். இங்குள்ள பார்த்தசாரதி விக்ரஹம் அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததாகும்.

வாமன அவதாரத்தை நினைவுறுத்தும் வண்ணமாக, கிழக்கே திருமுகம் காட்டி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் இத்தலப் பெருமான் திருக்குறளப்பன் என்னும் திவ்விய நாமம் தரித்துள்ளார். பார்த்தசாரதி என்றும் வழங்குவர். இங்கு பரசுராமருக்கும் ஒரு தனிச்சந்நதி உள்ளது.

தாயாரின் திருநாமம் பத்மாசனி நாச்சியார் என்பதாகும்.

தலச்சிறப்பு

இத்தலத்தின் வன்னிமரக் காய்களைத் தலையைச் சுற்றி எறிந்தால், குழந்தைகளைப் பீடித்துள்ள நோய்கள் விலகும் என்பது நம்பிக்கை

தலப்பண்

எந்தை குடிகொண்ட பின்னரும் என்நெஞ்சில்

முந்தை வினையேதும் மூளுமோ – பம்பை

நதியோடும் ஆறன் விளைவாழும் நாதன்

கதியென்று சென்றிடும் காண்.

ஓம் நமோ நாராயணாய!

Leave a Reply