பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி நேற்று தலைநகர் டில்லிக்கு நாடு திரும்பினார்.
டில்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய மோடியை பா.ஜ.க. தலைவர்களான சதீஷ் உபாத்யாய், விஜய் கோயல் மற்றும் பாஜக தொண்டர்கள் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர். சில நிமிடங்கள் அவர்களுடன் மோடி கலந்துரையாடிவிட்டு பின்னர் விமான நிலையத்தில் இருந்து தனது இல்லத்திற்கு கிளம்பிச் சென்றார்.
9 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முதல்கட்டமாக, பிரான்ஸ் சென்ற மோடி, அந்நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து கடந்த 12 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனியும் இந்தியாவும், இணைந்து நடத்திய வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடியும், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலும் தொடங்கி வைத்தனர். அந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அதன் பின் ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த புதன்கிழமை கனடா சென்றார். அங்கு இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தில் மோடி கையெழுத்திட்டார்.
அந்நாட்டில் வாழும் இந்திய மக்கள் மத்தியில் நேற்று மோடி உரையாற்றினார். இன்று அங்கிருந்து வான்கூவர் சென்று அங்குள்ள குருத்வாராவில் வழிபட்ட மோடி, செய்தியாளர்களை சந்தித்து தனது கனடா பயணம் மிகப்பெரிய வெற்றி என்று அறிவித்தார். பின்னர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டது குறிப்பிடத்தக்கது