தமிழக, கர்நாட அரசுகளின் மோதலுக்கு மத்திய அரசே காரணம். பழ.நெடுமாறன்

pazha.nedumaran
காவிரியின் குறுக்கே அணை கட்டவும், அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்தும் நேற்று ஒருநாள் அடையாள பந்த் கர்நாடகாவில் நடத்தப்பட்டது. இந்த முழு அடைப்பிற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே காரணம் என, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் அங்கு செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது, “கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள் சேர்ந்து நேற்று முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி ஓராண்டு காலமாகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இங்கேயும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. கர்நாடகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனவே, மத்திய அரசு செய்யும் தவறின் விளைவாக இரு மாநில மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் ஆதாயத்துக்காகச் செயல்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால், மக்கள் தமக்கு எதிராக வாக்களித்து விடுவார்களோ என பாஜக கருதுவதே இந்த பிரச்னைக்கு காரணம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Leave a Reply