ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவது உண்டு. அன்றைய தினம் நகைக்கடைக்காரர்களும் அதிகாலை ஐந்து மணியில் இருந்தே கடைகளை திறந்து வைத்து வியாபாரம் பார்ப்பது உண்டு. இதேபோல் இந்த வருட அட்சய திருதியை தினமான நாளை சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள நகைக்கடைகள் நாளை காலை 6 மணிக்கு முன்பாகவே திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாளில் வரும் திருதியை தினம், அட்சய திருதியை என கூறப்படுவதுண்டு. இந்த தினத்தில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அந்த பொருள் அதிகளவில் அந்த வருடம் முழுவதும் குவியும் என்பது ஐதீகம். முக்கியமாக அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள் என்ற நம்பிக்கை இந்து மக்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
எனவே நாளைய அட்சய திருதியை தினத்தில் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் மிக அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் நகைக்கடைகளை காலை 6 மணிக்கு முன்பே திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகள் முதல் சிறிய நகைக் கடைகள் வரை இந்த முடிவை எடுத்துள்ளன.
இதுகுறித்து சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘அட்சய திருதியை அன்று கூட்டம் அதிகமாக வரும் என்பதால் நகை வியாபாரிகள் பெரும்பாலானோர் நாளை காலை 5.30 மணிக்கே கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். அதேபோல் நாளை நள்ளிரவு 1 மணி வரை கூட கடைகளை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்காக எடை குறைவாக உள்ள நகைகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கேரள டிசைன் செயின்கள், வளையல்கள் மற்றும் தங்கக் காசுகள் அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அட்சய திருதியையொட்டி, நகைக் கடைகள் அதிகம் உள்ள தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.