அட்சய திருதியை: அள்ள அள்ளக் குறையாத ஐஸ்வர்யம் !

akshya_2375695g

ஏப்ரல் 21 அட்சய திருதியை

அட்சய என்றால் வளர்தல் என்று பொருள். அள்ள அள்ளக் குறையாத செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற பொருளாதார வளத்தைக் குறிக்கும் பொருட்கள் சேர வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளமுடைய வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை அட்சய திருதியை நாளாகக் குறிப்பிடுவர். இந்த நன்னாளில் இறை வழிபாடு பன்மடங்கு உயர்வைத் தரும் என்பர். அன்றைய தினம் ஹோமம், ஜபம் முதலியவை மட்டுமன்றி தானம் செய்வதற்கும் உகந்த நாள்.

பதினாறு வகையான தானங்கள் உயர்ந்தவை. அவற்றை இந்த நாளில் செய்யலாம். பொன், வெள்ளி, குடை, விசிறி, ஆடை, நீர், மோர், பானகம், காலணி, மல்லிகைப் பூ, உத்ராட்சம், புத்தகம், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், நோட்டு, தயிர் சாதம், போர்வை அல்லது பாய். இதனை வாழ்வின் ஒரு முறையாவது தானம் செய்ய வேண்டும். அதனையும் இந்த நன்னாளில் செய்வது பல மடங்கு புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.

எந்தவொரு செயலிலும் பல மடங்கு பயன் பெற விரும்புவது மனித மனம். இந்த நாளில் எது செய்தாலும் அது பன்மடங்கு உயரும் என்பதால் தீமையைச் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். அட்சயம் என்பதற்கு மேலும் மேலும் அழிவின்றி வளர்தல் என்று அர்த்தம். நன்மையானாலும், தீமையானாலும் விதிவிலக்கின்றி வளரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

akshya1_2375694g

அட்சய திருதியை வளர்ச்சி என்பதற்கு உதாரணமாக மகாபாரதத்தில் இருந்து இரண்டு கதைகளைச் சொல்லலாம்.

செல்வக் குசேலர்

குசேலர் தன் நண்பன் கண்ணனைக் காணச் சென்றார். நண்பன் ஆனாலும் வெறும் கையுடன் காணச் செல்ல முடியாதே. இருந்த ஒரு பிடி அரிசியை அவலாய் குத்தி, அதனைச் சுத்தமான கிழிசல் துணியில் கட்டிக் கொடுத்தாள் குசேலர் மனைவி.

ஆர்வமாய் அதனைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணர் அவலை வாயில் இடும்பொழுது அட்சய என்றார்.

நண்பனுடன் அளவளாவிவிட்டு, கண்ணனிடம் ஒன்றும் கேட்டு வாங்காமல் வெறும் கையுடன் வீடு திரும்புகிறோமே என்று குழம்பிய மனதுடன் ஊர் வந்து சேர்ந்தார். அரண்மனை போன்ற தன் வீட்டையும், செல்வச் செழிப்புடன் காணப்படும் மனைவியையும் கண்டு வியந்தார். இந்த செளபாக்கியங்கள் கிருஷ்ணர் கூறிய அட்சய என்ற சொல்லால் விளைந்தது. குசேலர் செல்வ வளமிக்கவரானார்.

akshya11_2375693g

துர்வாசர்

பாண்டவர் வனவாசத்தின்போது, அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு துர்வாச முனிவர் ஒரு நாள் வந்திருந்தார். தான் மிகுந்த பசியுடன் இருப்பதாகக் கூறினார். ஏற்கனவே பாண்டவர், கிருஷ்ணர் தந்த அட்சய பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவை உண்டுவிட்டதால், மிச்சம் ஏதும் இல்லை.

இந்த அட்சய பாத்திரத்தில் இருந்து நாளொன்றுக்கு ஒரு முறைதான் உணவினை எடுக்க முடியும். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் இன்றைய முறை முடிந்த பின்னரே, துர்வாசர் வந்து யாசகம் கேட்கிறார்.

பின்னர் ஆற்றில் குளித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார் அந்தக் கோபக்கார முனிவர். உலகப் பிரசித்தி பெற்ற அவரின் கோபத்துக்கு அஞ்சிய பாஞ்சாலி கண்ணனை வேண்டினாள். மனமிரங்கிய கண்ணன் அட்சய பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் ஒட்டிக்கொண்டிருந்த கீரையை அட்சயம் என்று சொல்லி உண்டார். சிறிது நேரம் கழித்து வந்த துர்வாசர் தனக்குத் தற்போது பசியில்லை என்று சொல்லிவிட்டுத் தன் வழியே சென்றுவிட்டார்.

அட்சய திருதியை தானம் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தரும்.

Leave a Reply