ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நேற்று அதிரடியாக அதன் முக்கிய தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர்கள் நீக்கப்பட்டனர். இதனால் ஆம் ஆத்மி கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முக்கிய தலைவர்களை நீக்கியதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் சர்வாதிகாரி என்பது நிரூபணமாகியுள்ளதாக அக்கட்சியிலிருந்து சமீபத்தில் விலகிய ஷாசியா இல்மி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கூறியபோது, “அரவிந்த் கெஜ்ரிவால் சர்வாதிகாரி என்பதை இது காட்டுகிறது. கட்சியின் கொள்கைகளை அவர் அலட்சியம் செய்வதுடன், கட்சியையே தனது கைக்குள் கொண்டு வந்துவிட்டார் ” என்று இல்மி கூறியுள்ளார்.
கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தான் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அக்கட்சியிலிருந்து இல்மி விலகினார். தற்போது இல்மி பாஜகவில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பிடிக்காததால் மேலும் சில தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.