தமிழகம் முழுவதும் நேற்றைய அட்சய திருதியை தினத்தில் சுமார் 2500 கிலோ தங்கம் விற்பனை ஆனதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் தங்கம் பெருகும் என்ற எண்ணம் மக்கள் மனதில் மேலோங்கியுள்ளதால் நேற்று காலை முதலே சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தங்கம் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். பொதுமக்களின் வசதிக்காக நேற்று காலை 6 மணி முதலே தங்க நகைக்கடைகள் திறக்கப்பட்டன.
கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை விட இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் தங்கத்தின் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கினர்.இந்த ஆண்டு கிராம் தங்கம் ரூ.2,526-க்கு விற்பனை செய்யப்பட்டது
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும், அட்சய திருதியையான நேற்று சற்று குறைந்தே காணப்பட்டது. நேற்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.39க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று ஒரு கிலோ கட்டி வெள்ளி, 36 ஆயிரத்து 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அட்சய திருதியை நாளில் தென்மாநிலங்களில் தான் அதிக அளவு தங்கம் விற்பனை ஆவதாக நகை வணிகர்கள் தெரிவித்தனர். அதாவது மொத்த நகை விற்பனையில் 60 சதவீதம் தங்கம் தென்மாநிலங்களில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். இந்த ஆண்டு தங்கம் மட்டுமின்றி அதிக அளவில் வைர நகைகளும் விற்பனை செய்யப்பட்டதாகவும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.