அதிமுகவுடன் கூட்டணி இல்லை என பாஜக கூறுவது உண்மையா? ஒரு அலசல்

admk and bjpஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு மிக விரைவில் வெளிவர உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் ஒருசில தலைவர்கள் கூறி வருவது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கடந்த 2004ஆம் ஆண்டு அதிமுகம்-பாஜக கூட்டணி ஏற்பட்டபோது திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து 100 சதவீத வெற்றியைப் பெற்றன. தற்போதும் அதுபோல நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே பாரதிய ஜனதா தலைவர்கள் அதிமுகவை திடீரென விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் மேல்மட்ட அளவில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக தலைமை இணைந்து செயல்படுவதாகவும், மக்களவையில் நிலம் கையகப் படுத்தும் மசோதாவை அதிமுக ஆதரித்ததையும், அரசியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில்  தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரிகளை இழுத்து பெரிய கூட்டணி அமைக்க திமுக முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை யாராலும் தடுக்க முடியாது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலிலேயே பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பாஜகவை ஒரு பொருட்டாகவே மக்கள் நினைக்க மாட்டார்கள். அதிமுக, பாஜகவின் ஆசைகள் நிறைவேறாது’’ என்றார்.

 இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ‘‘அதிமுக அரசை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். ஊழல் அரசை நடத்தி வரும் அதிமுகவுடனும், 2ஜி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவுடனும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பே இல்லை. சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் மாற்று அணியை உருவாக்குவோம்’’ என்றார்.

Leave a Reply