பாகிஸ்தான் நாட்டின் பிரபல கஸல் பாடகர் குலாம் அலி நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிறுவயது முதலே பாகிஸ்தானில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் பிரபல கஸல் பாடகர் குலாம் அலி, பாலிவுட் திரைப்படங்களிலும் ஒருசில பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த குலாம் அலி, மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சன் ஆலயத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இந்நிலையில் பிரதமரை சந்திக்க அவர் விரும்பியதாகவும், பிரதமரும் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் கூறியதை அடுத்து நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, ‘குலாம் அலியுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் இருவரும் நிறைய விவகாரங்கள் தொடர்பாக பேசினோம்’ என்று தெரிவித்துள்ளார்.