வரலாற்று சிறப்பு வாய்ந்த திருநங்கைகள் மசோதா. திருச்சி சிவா முயற்சிக்கு ஸ்டாலின் பாராட்டு

 transgenderTransgender bill passed in Rajya Sabhaதிமுக மக்களவை உறுப்பினர் திருச்சி சிவா எடுத்த தீவிர முயற்சிகள் காரணமாக பாராளுமன்றத்தின் ராஜ்யசபாவில் திருநங்கைகள் உரிமை மசோதா நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறிய பின்னர் கருத்து தெரிவித்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வகை செய்யும் இந்தத் தனிநபர் மசோதா நிறைவேறியது, மிக அரிதான ஒன்று என்று கூறினார்.

திருநங்கைகளுக்கு தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க வகை செய்யும் ‘திருநங்கைகள் உரிமை மசோதாவை கடந்த 2014’ ஆம் ஆண்டு மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்தார். இந்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா நிறைவேறியது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  கூறியபோது, “திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தனி நபர் தீர்மானம் மூலம் கொண்டு வந்த “திருநங்கையர்களின் உரிமைகள் தொடர்பான மசோதா 2014” மாநிலங்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்நாள் வரலாற்றில் மிக முக்கிய நாள். கடந்த 45 வருடங்களுக்குப் பிறகு தனி நபர் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று இப்படி நிறைவேற்றப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. வேறுபட்ட அரசியல் நிலவும் இந்த சூழ்நிலையில், இது போன்ற முக்கியமான மசோதாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதுடன் செயல்பட்டிருப்பது இதயத்திற்கு இனிமையான செய்தியாக அமைந்திருக்கிறது.

திருநங்கையரின் முன்னேற்றத் திட்டங்களுக்கு தேசிய அளவிலான கொள்கை உருவாக்கவும், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்கவும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா பெரிதும் உறுதுணையாக இருக்கும். அவர்களின் நல் வாழ்விற்காகவும், இந்த சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கும் திமுக என்றும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இவர்களுக்கு திருநங்கைகள் என பெயர் சூட்டி, வாரியம் அமைத்து, தொழில் துவங்க வழி வகுத்து, பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்ற காரணமாக இருந்தது தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கும் அதே வேளையில், இது மக்களவையிலும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதனிடையே, திமுக உறுப்பினர் திருச்சி சிவாவின் முயற்சிக்கு, நாடு முழுவதுமுள்ள திருநங்கைகள் அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply