13 ஆண்டுகளாக சிறையில் இருந்த செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விடுதலை.

prakash doctorபெண்களை ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற செக்ஸ் டாக்டர் பிரகாஷ் 13 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் நேற்று அவரை விடுதலை செய்வதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதனை அடுத்து டாக்டர் பிரகாஷ் நேற்று சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

புதுச்சேரியை சேர்ந்த கணேசன் என்பவர் செக்ஸ் டாக்டர் பிரகாசுக்கு எதிராக புகார் செய்த வழக்கு ஒன்றில் அப்போதைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து, 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டாக்டர் பிரகாஷை கைது செய்து விசாரணை செய்தார். இந்த வழக்கில் பிரகாசின் கூட்டாளிகளான சரவணன், விஜயன், நிக்சன், ஆசீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் பிரகாசின் தம்பி பிரதீப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

ஏழு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி  தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ராதா அளித்த தீர்ப்பின்படி ‘டாக்டர் பிரகாசுக்கு, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு ஜெயில், தகவல் தொழிநுட்ப குற்றத்துக்காக 5 ஆண்டு ஜெயில், ஆட்களை கடத்தி மிரட்டி தாக்கியதற்காக 10 ஆண்டு ஜெயில், விபசாரத்துக்காக பெண்களை அழைத்து வந்த குற்றத்துக்காக 7 ஆண்டு ஜெயில், பெண்களை பிடித்து வைத்து கணவன் அல்லாத ஆண்களுடன் கட்டாயப்படுத்தி மிரட்டி உடல் உறவுக் கொள்ளச் செய்ததற்காக ஆயுள் தண்டனையும், பெண்களை இழிவாக சித்தரித்ததற்காக 2 ஆண்டு ஜெயில் தண்டனை, ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டு ஜெயில் என சட்டத்தில் கூறப்பட்டுள்ள முழு தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த ஜெயில் தண்டனைகள் அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து டாக்டர் பிரகாஷ், சென்னை ஐகோர்ட்டில் 2011-ம் ஆண்டு மேல்முறையீடு செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மேல்முறையீட்டு வழங்க்கின் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது பிரகாஷ் 13 ஆண்டுகள் 3 மாதம் சிறையில் தொடர்ந்து இருந்து வருகிறார். அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையில், எங்களது தீர்ப்பை பிறப்பிக்கின்றோம். பிரகாசுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனை தீர்ப்பை உறுதிப்படுத்துகிறோம். அதேநேரம், அந்த தண்டனை காலத்தை மட்டும் மாற்றி அமைக்கின்றோம்.பிரகாஸ் அவர், இதுவரை சிறையில் இருந்த காலத்தை மட்டும் தண்டனை காலமாக நிர்ணயம் செய்கிறோம். மேலும் பிரகாஷ் டாக்டராக இருந்தவர் என்பதாலும், அவர் வறுமையில் இல்லை என்பதாலும் கீழ் கோர்ட்டு விதித்த அபராதத் தொகை முழுவதையும் 8 வாரத்துக்குள் அவர் செலுத்த வேண்டும். அபராதத் தொகை செலுத்திய பின்னர், அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என்றால், அவரை உடனடியாக சிறை நிர்வாகம் விடுதலை செய்யவேண்டும்’ என்று தீர்ப்பு கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பை தொடர்ந்து, அபராதத் தொகை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் பிரகாஷ் சிறையில் இருந்து நேற்று மாலை விடுதலை ஆனார். டாக்டர் பிரகாஷ் பல முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தும், அவருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கவில்லை. இதனால், 13 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து தற்போது அவர் விடுதலை ஆகி இருக்கிறார்.

Leave a Reply