பெண்களுக்கு என்றே பிரத்யேகமாக இருப்பது சினைப்பை சுரப்பி. இதிலிருந்துதான் பெண்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen), புரோஜெஸ்டிரான்(Progesterone ) என்ற இரண்டு முக்கியமான ஹார்மோன்கள் சுரக்கின்றன. டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்கூட சிறிதளவு சுரக்கும். பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அவசியம். பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிவரும், ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH) மற்றும் லூட்டினைசிங் ஹார்மோன்கள் (LH), சினைப்பை சுரப்பியைக் கட்டுப்படுத்துகின்றன. சினைப்பையில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் இனப்பெருக்கத்துக்கும், பெண்களின் உடலில் பல்வேறு இயக்கங்களுக்கும் முக்கியப் பங்காற்றுகின்றன.
பெண் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் ஈஸ்ட்ரோஜென் சிறிதளவுதான் சுரக்கும். பெரும்பாலும் 10, 11 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது அதிகரிக்கும். இதன் விளைவுதான் பெண்கள் பூப்பெய்துதல். இந்த நிலையில் முதல் கட்டமாக மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும். பிறகு ஐந்து நிலைகளாக மார்பகங்கள் வளர்ந்து முழு வளர்ச்சியை எட்டும். பெண்களுக்கு பூப்பெய்திய பிறகு, மாதவிடாய் சீராக நடப்பதற்கு பிட்யூட்டரியில் இருந்து வெளிவரும் எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் ஹார்மோன்கள் துணைபுரிகின்றன.
டர்னர் சிண்ட்ரோம்:
பெண்களும் ஆண்களும் வேறுபடுவது குரோமோசோம்களில்தான். ஆண்களுக்கு எக்ஸ் ஒய் (XY) என்ற குரோமோசோம்களும் பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம்களும் இருக்கும். பிறவிக் குறைபாடாக சில பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்களில் ஒன்று மட்டுமே இருக்கும். இவர்களுக்கு சினைப்பை ஒழுங்காக வளராது. இதன் காரணமாக, பூப்பெய்த முடியாமல், மாதவிடாய் வராமல் குழந்தை பெற முடியாமல்பாதிக்கப்படுவார்கள். இந்தப் பிரச்னைக்கு டர்னர் சிண்ட்ரோம் (turner syndrome) என்று பெயர். இதற்கு ஹார்மோன் சிகிச்சை இருக்கிறது. குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதோ, குழந்தை பிறந்தவுடனோ அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவு சீராக இருக்கிறதா என்பதை ரத்தப்பரிசோதனை, எஃப்.எஸ்.ஹெச் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். ஈஸ்ட்ரோஜென் சீராகச் சுரக்காத பெண் குழந்தைகள், உயரம் குறைவாக இருப்பார்கள். இதற்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மாத்திரைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சை கொடுத்தால், கருப்பை சீராக வளரும். மாதவிடாய் சீராக இருக்கும். மார்பகங்கள் வளர்ச்சி பெறும் . ஆனால் கரு முட்டைகள் உருவாகாது என்பதால் குழந்தைப்பேறு இருக்காது.
ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர்:
வெகு சில பெண்களுக்கு இளம்வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடும். இதற்கு ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் (premature ovarian failure) என்று பெயர். பெண்களுக்கு பொதுவாக 47 – 53 வயதில்தான் மாதவிடாய் நிற்கவேண்டும். 20, 30, 40 வயதுகளில் மாதவிடாய் நின்றுவிட்டால் எலும்பு தேய்மானம், இதய நோய்கள் போன்றவை இளம் வயதிலேயே வந்துவிடும். எனவே இவர்கள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோய்த் தாக்குதல்களில் இருந்து விடுபட முடியும்.
ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சிகிச்சையால் புற்றுநோய் வருமா?
மாதவிடாய் முன்கூட்டியே நின்றுபோனால், ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. அதனால் எந்த நோயும் வராது. ஆனால், 50 வயதைத் தாண்டிய சில பெண்கள், மாதவிடாய் நின்றுவிட்டதால் தங்களை பல்வேறு நோய்கள் தாக்குவது போலவும் தங்களது இளமையும் பொலிவும் போய்விட்டது போலவும் நினைத்துக்கொண்டு, ஹார்மோன் ஊசிகள், மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பி.சி.ஓ.எஸ்:
பெண்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி, சினைப்பை சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள் சீரற்ற விகிதத்தில் சுரந்தால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும். இதை ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ (PCOS) என்பார்கள். பி.சி.ஓ.எஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு ஆண்களைப்போல ரோமம் வளரும்; உடல் பருமன் அதிகரிக்கும்; மார்பகம் சிறிதாகும்; மாதவிடாய் சீராக வராது. மிக முக்கியமாக இன்சுலின் சீராகச் செயல்படாததன் காரணமாக சர்க்கரை நோய், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை ஏற்படும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைக்கவேண்டியது அவசியம். சீரான உணவு, நிம்மதியான தூக்கம், உடற்பயிற்சி, தியானப்பயிற்சி கடைப்பிடிப்பதன் மூலம் ஹார்மோன் சமச்சீரின்மையைக் கட்டுப்படுத்தலாம்.