நேபாள பூகம்பம். பாதிக்கப்பட்டோர் குறித்த நிலை அறிய கூகுள் சிறப்பு ஏற்பாடு

googleகடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாள நாட்டின் பெரும்பகுதி சிதைவுற்று அந்நாட்டில் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் பலியானதாக திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவல் அறிய மற்றும் அதிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில் கூகுள் நிறுவனம் பர்சன் பைண்டர் இணைய சேவையை துவக்கியுள்ளது.

பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்படும் போது தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம் இருப்பதால் இவற்றில் சிக்கியவர்களின் நிலை பற்றி உடனடியாக வெளியுலகிற்கு தெரிவதில்லை. ஃபேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் ஓரளவிற்கு கை கொடுத்தாலும் பேரிடர் பகுதிகளில் வசித்து வந்தவர்களின் நிலை என்ன என்பதை அவரது உறவினர்களும் நண்பர்களும் உடனடியாக தெரிந்துகொள்ள இயலாத நிலை இருக்கிறது.

இது போன்ற சூழலில், எளிதாக கை கொடுக்கும் தொழில்நுட்பமாக பியூபில் பர்சரன் இணைய சேவை ஒன்றை கூகுள் ஏற்கனவே உருவாக்கி உள்ளது. இதன் அடிப்படையில் எளிமையான இணையதளமான இந்த சேவையில் இரண்டு பகுதிகள் இருக்கும். ஒன்று உயிர்பிழைத்தவர்கள் மற்றும் நலமுடன் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிப்பதற்கான பகுதி. பேரிடர் பகுதிகளில் தகவல் ஒருங்கிணைப்பு பெரும் சோதனைக்கு உள்ளாகும் ஆரம்ப கட்டத்தில் மீட்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் இந்த பகுதியில் அவற்றை வெளியிடலாம்.

இரண்டாவது பகுதி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான விவரங்களை தேடுவதற்கானது. இந்த பகுதியில் உறவினர்கள் பெயர் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்து அவர்களில் நிலை பற்றிய விவரங்களை கோரலாம். இதைப் பார்த்து விவரமறிந்தவர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து அறிவதற்கான மற்றும் உயிர் பிழைத்தவர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்துகொள்வதற்கான தகவல் மேடையாக இந்த தளம் செயல்படுகிறது. இந்த இணைய சேவையை கூகுள் நேபாள பூகம்பத்திற்காக புதுப்பித்துள்ளது. ஏற்கனவே உத்ராகாண்ட் மேக்வெடிப்பு பாதிப்பு மற்றும் பாலின் புயல் பாதிப்பு போன்ற பேரிடர்களின்போது கூகுள் இந்த பர்சன் பைண்டர் சேவையை அமைத்தது. தற்போது நேபாள மக்களுக்கு உதவுவதற்காக இந்த சேவையை அமைத்துள்ளது.

இணையதள முகவரி: <https://google.org/personfinder/2015-nepal-earthquake/>

Leave a Reply