கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் வீடு மற்றும் உடமைகளையும் இழந்து அடுத்த வேளை சாப்பட்டிற்கே கஷ்டப்பட்டு வருவதாக பரிதாப செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் தற்போது தங்களுடைய வீடு எங்கே இருக்கின்றது என்பது கூட தெரியாத நிலையில் வெறும் கற்குவியல்கள் நடுவில் சோகமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு இன்று முதல் தினமும் 25 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்க சீக்கிய மத அமைப்புளான சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி, டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி ஆகியவை முடிவு செய்துள்ளன.
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அவர்களின் ஆலோசனைக்கேற்ப இந்த உதவி அளிக்கப்படுகிறது என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த அமைப்புகள் சார்பில் காத்மாண்டுவில் சமுதாய சமையல் கூடம் ஒன்றை தற்காலிகமாக நிறுவி உணவு சமைத்து அதை அங்குள்ள பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 100 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க, குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்று முன்வந்துள்ளது. பரூல் ஆரோக்ய சேவா மண்டல் என்ற அறக்கட்டளை சார்பில் வடோதராவில் இயங்கி வரும் பரூல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இந்த தகவலை நேற்று தெரிவித்தார். தங்கள் முடிவு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து நேபாளத்துக்கு ஏராளமான நிவாரணப்பொருட்கள் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து அவசரகால உதவியாக 10 லட்சம் டாலர் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாள அரசுடன் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.