நேபாள பூகம்பத்திற்கு ராகுல்காந்தியே காரணம். பாஜக எம்.பி. திடுக்கிடும் குற்றச்சாட்டு

rahul nepalகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் நேபாளம் சென்றபோது சுத்தம் இல்லாமல் கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால்தான் நேபாளத்தில் பேரழிவு பூகம்பம் ஏற்பட்டதாக பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கடந்த விடுமுறை முடிந்து திரும்பி வந்தவுடன் கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் உள்ள பிரபல ஆன்மிகத் தலமான கேதார்நாத்துக்கு ஆன்மிக பயணம் சென்றார். ராகுல்காந்தி 16 கி.மீ. தூரம் மலையில் நடந்து சென்று வெள்ளிக்கிழமை காலையில் கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ராகுல்காந்தி சுவாமி தரிசனம் செய்த மறுநாளே இமயமலை நாடு என்று அழைக்கப்படுகிற நேபாளத்துக்கு ஒரு கருப்பு நாளாக அமைந்து விட்டது.

அழகிய சுற்றுலா ஸ்தலமாக விளங்கிய நேபாளம், பூகம்பத்தால் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தில் மட்டும் 4,310 பேர் உயிரிழந்து உள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சுத்தம் இல்லாமல் கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால்தான் நேபாளம் பேரழிவு பூகம்பத்திற்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் குற்றம் சாட்டிஉள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றுதான்.  ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய சாக்‌ஷி மகாராஜ் “ராகுல் காந்தி மாட்டு இறைச்சி சாப்பிட்டு விட்டு சுத்தம் இல்லாமல் புனித தலமான கேதார்நாத்திற்கு யாத்திரை சென்றார். இதன் காரணமாகவே நேபாளத்தில் பேரழிவு பூகம்பம் ஏற்பட்டு உள்ளது,” என்று கூறியுள்ளார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சாத்வி பராசியும் அப்போது உடன் இருந்தார். அவர் ராகுல்காந்தியின் கேதார்நாத் பயணத்திற்கும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சாக்‌ஷி மகாராஜ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, சாத்வி மகாராஜுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply