இந்தியாவில் இயங்கி வரும் 9,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு அதன் உரிமங்களை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிடம் இருந்து நிதி பெற்று சேவை செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தவுடன் தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (Foreign Contribution Regulation Act) மீறியதற்காக சுமார் 9 ஆயிரம் என்.ஜி.ஓ.க்களின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த உத்தரவு இன்று அதிகாரபூர்வமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது:
“2009-2010, 2010-2011 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்துமாறு 10 ஆயிரத்து 343 என்.ஜி.ஓ.க்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது, அந்த நிதி யாரிடமிருந்து வந்தது, எதற்காக நிதி பெறப்பட்டது, அதை வைத்து என்ன செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை ஒரு மாதத்திற்குள் அளிக்குமாறும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட என்.ஜி.ஓ.க்களில் வெறும் 229 என்.ஜி.ஒ.க்கள் மட்டுமே பதில் அளித்தன. மேலும் 510 என்.ஜி.ஓ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மீறியதற்காக 8 ஆயிரத்து 975 என்.ஜி.ஓ. க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசு சட்ட விதிமீறல் செய்த காரணத்திற்காக கிரீன் பீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் உரிமத்தை நீக்கி அதன் வங்கிக் கணக்குகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுக்க பல்வேறு சமூக நடவடிக்கைகள் மேற்கொண்ட என்.ஜி.ஓ.க்கள் மத்தியில், மத்திய அரசின் இந்த ரத்து நடவடிக்கை கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.