அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றை துப்பாக்கி முனையில் ஈரான் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறை வைக்கப்பட்ட தங்கள் நாட்டு கப்பலை மீட்க அமெரிக்க கடற்படை தனது போர்க்கப்பலை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பெர்சிய வளைகுடாவில் சென்று கொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் ஒன்றை தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஈரான் அரசு அதிரடியாக துப்பாக்கி முனையில் சிறை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மாயர்ஸ்க் டைகிரிஸ் என்ற இந்த அமெரிக்க கப்பலில் 24 ஊழியர்கள் உள்ளனர். ஈரானின் ரோந்து படையினர் கப்பலை சுற்றி வளைத்தபோது கப்பல் கேப்டன் சரண் அடைய மறுத்ததாகவும், இதையடுத்து துப்பாக்கி முனையில் கப்பலை சிறை பிடித்ததாகவும் ஈரான் தரப்பு கூறியுள்ளது.
அமெரிக்க கப்பல் சிறை பிடிக்கப்பட்ட தகவலை பெண்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெண்டகன் அதிகாரி ஒருவர் கூறியபோது, “சர்வதேச அங்கீகாரம் உள்ள கடல் மார்க்கத்தில்தான் அமெரிக்க கப்பல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதை ஈரான் படையினர் துப்பாக்கி முனையில் தங்களது பகுதிக்குள் திருப்பிச் சென்றுள்ளனர். ஈரான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து உதவி அமெரிக்க கப்பலின் கேப்டன் அமெரிக்கக் கடற்படைக்குத் தகவல் அனுப்பினார். இதையடுத்து போர்க்கப்பல் பெர்சிய வளைகுடாவுக்கு விரைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே உறவு சரியில்லாத நிலையில் மீண்டும் கிளம்பியுள்ள இந்த பிரச்சனையால் இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படுமா? என்ற அச்சம் வளைகுடா நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.