கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பதி அருகேயுள்ள வனப்பகுதியில் 20 தமிழர்கள் செம்மரங்கள் வெட்டி கடத்தியதாக ஆந்திர போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல நாட்கள் இரு மாநிலங்களுக்கும் இடையே பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் தற்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தமிழகத்தில் இருந்து வழக்கம் போல பக்தர்கள் செல்ல தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நாளை மே 1ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக இருப்பதாலும், அதன்பின்னர் சனி, ஞாயிறு என வார விடுமுறை தினங்கள் வருவதாலும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக, ஆந்திர எல்லையில் எவ்வித அசம்பாவிதமும் நேராமல் இருக்க இருமாநில போலீஸார்களும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.