கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகளின் தற்கொலை நாடு முழுவதையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விவசாயிகளின் தற்கொலை என்பது ஒரு நாடகமாக நடத்தப்பட்டு வருகிறது என சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை ஹரியானா வேளாண்துறை அமைச்சர் ஒருவர் கூறியுள்ள கருத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநில வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கும் ஓம் பிரகாஷ் தாங்கர் அவர்களிடம் நேற்று செய்தியாளர்கள் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நஷ்டஈடு வழங்குமா? என்று கேள்வியை எழுப்பியபொது பதில் கூறிய பிரகாஷ் தாங்கர் ”இந்திய சட்டத்தின்படி தற்கொலை செய்து கொள்வது ஒரு குற்றச் செயல். யாராவது ஒருவர், தற்கொலை செய்து கொண்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறுவாரோ அவர் கோழைதான். அரசு அமைப்புகள், இந்த கோழைகளுக்கு பின்னால் நிற்காது. இதுமாதிரியான குற்றவாளிகளுடன் அரசு இருக்கவும் முடியாது” என்று கூறினார்.
அமைச்சரின் இந்த சர்ச்சைக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஹரியானா காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் கூறும்போது, ”விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசு கொண்டிருக்கும் அலட்சிய மனபோக்கை இது காட்டுகிறது. கட்டாரியா அரசு தனது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இன்னும் ஏராளமான விவசாயிகள் தங்களுடைய உயிர்களை மாய்த்துக்கொள்ளும் வரை காத்திருக்கட்டும்” என்றார்.
ஓம் பிரகாஷ் தாங்கரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். இது குறித்து ஓம் பிரகாஷ் தாங்கர் நேற்று கூறும்போது, ”முன்பு நான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன். தற்கொலை என்பது தற்போது ஒரு நாடகமாக நடத்தப்படுகிறது. என்னால் முடிந்தவரை விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறேன்.
விவசாயிகளுக்காக கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். பயிர்கள் சேதம் அடைந்தது என்பதற்காக தற்கொலை செய்து கொள்வது அதற்கு தீர்வாக அமையாது. பூஜ்ய நிலையில் இருப்பவர்கள் மறுபடியும் தங்களுடைய விவசாயத்தை தொடங்க வசதிகள் உள்ளன. டெல்லி ஆம் ஆத்மி கூட்டத்தில் நடைபெற்ற நாடகம் போல் இன்னொரு நாடகத்தை நாம் அனுமதிக்க கூடாது’ என்று கூறினார்.