மதுக்கடைகளை மூடக்கூடாது. எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

wineshop bangaloreதமிழகத்தில் அதிமுக, திமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதிலும், இரு கட்சிகளுமே மதுவிலக்கு கொள்கையை கடைபிடிப்பதில்லை. டாஸ்மாக் வருமானம் அரசுக்கு பெரிய வருமானமாக இருப்பதால், அதை இழக்க விரும்பாமல் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகின்றது. தமிழக எதிர்க்கட்சிகளும், பொது மக்களும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருவது ஒரு தொடர்கதையாகவே உள்ளது.

இந்நிலையில் மதுக்கடைகள் இருப்பதால்தான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கின்றோம். எனவே மதுக்கடைகளை எக்காரணத்தை கொண்டும் மூடக்கூடாது என பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

பெங்களூர் அருகே உள்ள கூடலசங்கமா என்ற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சமீபத்தில் அந்த பகுதியின் தாசில்தார் சுபாஷ் சம்பகாவி அவர்களை நேரில் சந்தித்து வித்தியாசமான மனு ஒன்றை அளித்தனர். ”எங்கள் கிராமத்தில் மதுக்கடை இருப்பதால்தான் நாங்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்கிறோம். எங்கள் குடும்பத்தலைவர்கள் பகலில் கடுமையாக வேலை பார்த்துவிட்டு மாலையில் உடல் வலியை மறக்க மது குடித்துவிட்டு நேராக வீட்டுக்கு வந்து தூங்கி விடுகின்றனர். மதுப்பழக்கம் இல்லாத குடும்பத்தலைவர்கள் இரவில் வெகுநேரம் ஊரை சுற்றிவிட்டு நள்ளிரவில் வீடு வருகின்றனர். எனவே மதுக்கடைகள் இருப்பதால்தான் நாங்கள் குடும்பத்தலைவர்களுடன் பாதுகாப்பாக வீட்டில் இருக்கின்றோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை மட்டும் எக்காரணம் கொண்டும் மூடக்கூடாது” எனக் கூறியுள்ளனர்.

இந்த கிராம மக்களின் மனுவை பார்த்து ஆச்சரியம் அடைந்த தாசில்தார் அந்த பகுதியில் மதுக்கடைகள் நீடிக்க ஆவண செய்வதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளாராம்.

Leave a Reply