சரத்குமார்-எஸ்.தாணு முயற்சியால் ‘உத்தம வில்லன்’ இன்று ரிலீஸ்

uthama villainவிஸ்வரூபம் படத்தை அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து நேற்று வெளியாகவிருந்த கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் இடையேயான பிரச்சனையால் வெளியாகவில்லை. இதனால் கமல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஒருசில இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடந்தது.

இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் முன்வந்தனர். இருவரும் தயாரிப்பாளர் தரப்பு மற்றும் பைனான்சியர் தரப்பு ஆகியோர்களிடம் தனித்தனியாக மற்றும் இணைந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட்டனர். நேற்று மாலை முதல் இன்று அதிகாலை நான்கு மணி வரை விடிய விடிய நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இறுதியில் சமரசம் ஏற்பட்டது.

இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கலைப்புலி எஸ்.தாணு, ‘உத்தம வில்லன் படப்பிரச்சனை சுமூகமாக தீர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்று காலை காட்சி முதல் தமிழகம் முழுவதும் ‘உத்தம வில்லன்’ திரையிடப்படும் என்றும் தெரிவித்தார்.

கமல் ரசிகர்கள் இந்த செய்தியால் மகிழ்ச்சியடைந்திருந்தாலும், நேற்று தமிழகம் தவிர அனைத்து இடங்களிலும் வெளியாகிவிட்டதால் திருட்டு விசிடி இன்று காலை முதல் நடமாடுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனால் ‘உத்தம வில்லன்’ எதிர்பார்த்த வெற்றியை பெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

Leave a Reply