கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் திரும்பிய கிலானிக்கு, பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் தலைமையில் ஸ்ரீநகரில் அளிக்கப்பட்ட வரவேற்பு பேரணியில் சில இளைஞர்கள்பாகிஸ்தான் கொடியை ஏந்திச் சென்றதுடன், இந்திய எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மஸரத் ஆலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் நேற்று காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி தலைமையில் நடந்த பேரணியில் மீண்டும் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் டிரால் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற கிலானியின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடியை கைகளில் ஏந்தியிருந்ததனர். அதுமட்டுமின்றி இந்திய எதிர்ப்பு முழக்கங்களையும், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களையும் எழுப்பினர். இந்த கூட்டத்தில் மிக ஆவேசமாக பேசிய கிலானி, இந்தியாவுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்களை மீண்டும், மறுகுடியேற்றம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க கூடாது என்று கிலானி இந்த கூட்டத்தில் பேசினார். கிலானியின் இந்த பேரணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, இந்தியாவை தலிபான் கொள்கையால் ஆட்சி செய்ய முடியாது என்பதை பிரிவினைவாத தலைவர்கள் உணர வேண்டும் என்றார்.