அழகர் ஆற்றில் இறங்க வைகை அணை திறப்பு!

[carousel ids=”62097,62098,62099″]

ஆண்டிபட்டி: மதுரை, சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வைகை அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில், கோடை மழையால் பெரியாறு, வைகை அணைக்கு கணிசமான நீர் வந்துள்ளது. வைகை அணை நீர் மட்டம், நேற்று காலை, 41 அடியாக உயர்ந்துள்ளது. மதுரை, சித்திரை திருவிழாவில், கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி, வரும் 4ம் தேதி நடை பெற உள்ளது. அணையின் நீர் இருப்பு கணிசமாக உள்ளதால், விழா கொண்டாட வசதியாக, வைகை அணையில், 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், வைகை ஆற்றில் நாளை மறுநாள், மதுரையை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மே 2, மாலை மதுரை புறப்படுகிறார் அழகர்: மே 4ல் வைகையில் இறங்குகிறார்

அழகர்கோவில்: வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக கள்ளழகர் வேடத்தில் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார் சுந்தரராஜ பெருமாள்.

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 30ல் துவங்கியது. முதல் இரண்டு நாட்களும் பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி கோயிலை வலம் வந்தார். வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக இன்றிரவு 7 மணிக்கு கள்ளழகர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார்.

வைகை ஆற்றில் இறங்குகிறார்:
மே 3ல் மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் எதிர்சேவை நடக்கிறது. மே 4ல் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் காலை 7 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பின், 7.45 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அழகருக்கு ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் சென்றடைகிறார். மே 5ல் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. கோயிலில் இருந்து அழகர் புறப்படும்போது அவரை தரிசிக்க ஏராளமானோர் வாகனங்களில் வருவர். வாகனங்கள் பொய்கைகரைப்பட்டி அருகேயே நிறுத்தப்படும். பக்தர்கள் 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த ஆண்டு கோயிலில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் தரிசிக்கும் வகையில் கோரிப்பாளையம், தல்லாகுளம் பெருமாள் கோயில், ராமராயர் மண்டபம் உட்பட 5 இடங்களில் மெகா சைஸ் எல்.இ.டி., டிவிக்கள் வைக்கப்படுகின்றன.


17 கி.மீ., பயணம்:
தமிழகத்தில் அதிக நாட்கள் நடக்கும் திருவிழா இதுதான். பக்தர்களை நேரில் சந்தித்து ஆசி வழங்குவதற்காக அழகர் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகர் 17 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார். அழகர் ஆற்றில் இறங்குவதற்கு வசதியாக வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நாளை மாலை மதுரை வந்தடைகிறது.

Leave a Reply