ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணிக்கு இது மூன்றாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் முதலில் ஐதராபாத் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டதை அடுத்து ஐதராபாத் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டகாரர்களான தவான் மற்றும் வார்னர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். வார்னர் 61 ரன்களும், தவான் 37 ரன்களும், மோர்கன் 32 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் குவித்தது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே ரன்குவிக்க தவறியதோடு தங்கள் விக்கெட்டுக்களையும் அடுத்தடுத்து பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொல்கத்தா அணியை பெங்களூர் அணி தோற்கடித்தது.
ஸ்கோர் விபரம்:
கொல்கத்தா அணி 111/4 10 ஓவர்கள்
பெங்களூர் அணி 115/3 9.4 ஓவர்கள்
முன்னதாக இந்த போட்டிக்கு முன் மழை பெய்ததால் 10 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.