தனியாரிடம் இருந்து பால் கொள்முதல் செய்வதற்காகவே பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் வாங்கும் அளவை ஆவின் நிர்வாகம் குறைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் ”நீண்டகாலமாக ஆவின் நிர்வாகத்துப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் அளவை குறைக்கப்போவதில்லை என்றும் தனியாரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் ரமணா நேற்று செய்தியாளர்களிடம் உறுதி கூறியுள்ளார்.
நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் ரமணாவை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் பாலின் அளவை எந்த அளவிலும் குறைக்கக் கூடாது என்றும் அவர்களிடம் கொடுக்கும் பாலை முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை முழு அளவில் ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரமணா, பால் கொள்முதல் விஷயத்தில் பால் உற்பத்தியாளர்கள் கவலையுற தேவையில்லை என்றும், மாநில அரசு என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.