“மிஸ் கூவாகம்” பட்டத்தை வென்ற மதுரை பொறியியல் பட்டதாரி.

koovagamவிழுப்புரம் அருகே மிகவும் சிறப்பாக நடைபெற்று வரும் திருநங்கைகளின் திருவிழாவான கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் இன்று நடந்த மிஸ் கூவாகம் போட்டியில், மதுரையை சேர்ந்த பிரவீனா என்பவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

விழுப்புரம் அருகே கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சி மிஸ் கூவாகம்’ என்ற நபரை தேர்வு செய்வது.

மிஸ் கூவாகம்’ பட்டத்தை பெற கடும் போட்டி இருக்கும். வண்ண வண்ண உடையில் கிலோ கணக்கில் பூ வைத்து தங்களை அழகுபடுத்தி கொண்டு இந்த பட்டத்தை வெல்ல அனைத்து திருநங்கைகளும் முயற்சி செய்வதுண்டு.

மிஸ் கூவாகம் பட்டத்தை வெல்ல ரேம்ப்வாக், கேட்வாக் போன்ற போட்டிகளிலும் திருநங்கைகள் பங்கு கொண்டனர். மொத்தம் 63 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் திருநங்கைகளின் அழகுடன் அவர்களின் நடை, உடை, அறிவு திறனுக்கும் சமமான மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. முதல் சுற்றில் 10 பேர் தேர்வான நிலையில், அதிலிருந்து மூன்று பேரை  நடுவர்கள் நடிகை ஷகிலாவும், அனுராதாவும் தேர்வு செய்தனர்.

இறுதியில் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் மிஸ் கூவாகம் பட்டத்தை மதுரையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரவீனா வென்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாது இடத்தை தூத்துகுடியை சேர்ந்த சசியும், மூன்றாவது இடத்தை  மதுரையை சேர்ந்த ஹாரினியும் பெற்றனர்.

மிஸ் கூவாகம் பட்டம் வென்ற மதுரை பிரவீனா, செய்தியாளர்களிடம் கூறியபோது, “‘நாங்களும் பெண்கள்தான், எங்களை வெறுப்புடன் பார்க்காதீர்கள். பெண்ணின் ஆன்மா தவறான உடலின் (ஆண்) வாழும் வெளிப்பாடுதான் நாங்கள். நிறைய திருநங்கைகள் நன்றாக படித்திருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு வேலை கொடுங்கள். எங்களுக்கு யாரும் வேலை தராமல், பிச்சை எடுப்பதை மட்டும் கேவலமாக பேசாதீர்கள். ஒருசில திருநங்கைகள் தப்பு செய்வதால் எல்லாரும் தப்பானவர்கள் இல்லை” என்று கூறினார்.

வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு நடிகை ஷகிலா பரிசுகளை வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ”திருநங்கைகளிடம் உள்ள நல்ல மனது வேறு யாருக்கும் இருக்காது. நாட்டில் ஜாதி, மத கலவரம் நடந்து கொண்டிருக்கும்போது, அதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் திருநங்கைகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒரு முஸ்லீம் திருநங்கை, இந்து திருநங்கையை மகளாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேறு யாருக்கு இருக்கும்.

எனக்கு அம்மா, அப்பா கிடையாது, தம்பியும் எங்கயோ இருக்கான். இப்படிப்பட்ட எனக்கு, 5 வருடமாக தங்கம் என்கிற திருநங்கைதான் எல்லாமுமாக இருக்காங்க. என்கிட்ட பேசவே பலர் தயங்கும் போது, தங்கம் தான் என் மேல் பாசமா, அக்கறையா இருக்காங்க. சமூகம், உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கவலைப்படாதீர்கள். நான் உங்களுக்கு அம்மாவா, அக்காவா, தங்கச்சியா இருப்பேன்” என்று நெகிழ்வுடன் பேசினார்.

Leave a Reply