ஆண் குழந்தை பிறக்க வைக்கும் மருந்துக்கு திடீர் தடை. ம.பி. அரசு அதிரடி

ramdevஆண்குழந்தை பிறக்க பாபா ராம்தேவ் ஆயுர்வேத மருந்து ஒன்றை விற்பனை செய்வதாக கடந்த சில நாட்களாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த குறிப்பிட்ட மருந்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவின் ஆசிரமத்தில் புத்ரஜீவக் பீஜ் என்ற ஆயுர்வேத மருந்து கடந்த சில மாதங்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மருந்தை  சாப்பிடும் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை ராம்தேவின் பக்தர்களிடையே பரவியதால் இந்த ஆயுர்வேத மருந்தின் விற்பனை பலமடங்கு பெருகியது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பெரும் பிரச்சனை வெடித்தது. ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் கே.சி.தியாகி, சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயா பச்சன் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் ஆண்-பெண் பாலின விகிதாச்சாரம் குறைந்து வருகிற நிலையில், இப்படி ஒரு மருந்தினை தயாரிக்க எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பியதோடு, இந்த மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர்.

இதனை அடுத்து இதுகுறித்து விசாரணை செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா உறுதி அளித்தார். இந்நிலையில், இந்த மருந்தை விற்பனை செய்ய மத்தியப் பிரதேச மாநில அரசு இன்று அதிரடியாக தடை விதித்துள்ளது. புத்ரஜீவக் பீஜ் என்ற பெயரை மாற்றும்வரை மருந்தை கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டாம் என விநியோகஸ்தர்களிடம் மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இந்த பிரச்சனை குறித்து விளக்கம் அளித்துள்ள பாபா ராம்தேவி, “ஆண், பெண் என்ற பாலினத்தை ‘புத்ரஜீவக் பீஜ்’ என்னும் மருந்து தீர்மானிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன், சிலர் இந்த மருந்து குறித்து அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த மருந்து குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்க வழிசெய்யும் என்பது மட்டுமே உண்மை. எனவே, இந்த மருந்தின் பெயரை மாற்ற முடியாது’  என்று கூறியுள்ளார்.    

Leave a Reply