காவலர்களுக்கு ஓசியில் சோறு போடும் கூட்டம் எங்கள் வணிகர்கள் கூட்டம். விக்கிரமராஜா ஆவேச பேச்சு

vikramarajaதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வண்டலூரில் நடைபெற்ற மாநாட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மிகவும் ஆவேசத்துடன் காவல்துறையினர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் பேசியதால் பெரும் பரரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வணிக விரோத சட்டங்கள் எதிப்பு மாநாடு சமீபத்தில் வண்டலூரில் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பெருந்திரளான வணிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:

“வணிகர்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும், வணிகவரித் துறையினரால் வணிகர்கள் மிரட்டப்படுகிறார்கள். லட்சம் லட்சமாக வணிகர்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொள்ளை அடிக்கின்றார்கள். இனி லஞ்சம் கேட்டு எங்களை மிரட்டும் அதிகாரிகள், இந்த மாநிலத்தை விட்டு விரட்டப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

இங்கே மாநாடு நடத்தப் போகிறோம் என்று காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அதைப் பெற்றுக் கொண்டவர்கள், அனுமதி தராமல் அமைதியாக இருந்துவிட்டு பத்து நாட்களுக்கு முன்பு உதவி ஆய்வாளரை அனுப்பி இங்கே மாநாடு நடத்தக் கூடாது என்று சொல்கின்றார்கள். நீதிமன்றம் சென்று போராடித்தான் மாநாட்டிற்கான அனுமதி பெற்றோம்.

ஒரு மாவட்டத்தில் 10.30 மணிக்கு கடைய அடைக்க வேண்டும் என்கின்றீர்கள். இன்னொரு மாவட்டத்தில் 11.00 மணி வரை நடத்தலாம் என்கின்றீர்கள். சில இடங்களில் 12 மணி வரை கூட நடத்த அனுமதி கொடுக்கின்றார்கள். இவை அனைத்தும் தமிழகத்தில்தானே உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளே தமிழகம் முழுவதும் பொதுவான முடிவெடுங்கள்.

இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் சுற்றும் காவலர்களுக்கு ஓசியில் சோறு போடும் கூட்டம் எங்கள் வணிகர்கள் கூட்டம். பெட்ரோல்போட காசில்லையா…? பழைய இரும்பு பொருள் வியாபாரியை சந்தித்து, காசு வாங்கிக் கொண்டு செல்லும் கூட்டம் காவல்துறை கூட்டம். ஆனால், நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. உழைத்து, போராடி, வரிவசூலித்து கொடுக்கின்றவர்கள்.

காவல்துறையினரே, தவறு செய்பவர்கள் உங்கள் முன்னே இருக்கிறார்கள். கை, கால்களை வெட்டுவதற்கும், உயிரை எடுப்பதற்கும் தமிழகமெங்கும் கூலிப்படைகள் பெருகி கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் பிடித்து உள்ளே தள்ளுங்கள். தேவையில்லாமல் எங்கள் மாநாட்டை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்படாதீர்கள். வாங்கிய காசுக்கு நன்றியோடு செயல்படுங்கள்.

சென்னை மாநகராட்சியில் கடைகளுக்கு லைசன்ஸ் எடுப்பதற்கு புதிய சட்டங்கள் போடுகின்றார்கள். கட்டட உரிமையாளர் கட்டடத்திற்கு வரியை செலுத்தி என்.ஓ.சி. பெற்ற பிறகுதான் நமக்கு வியாபார அனுமதி கொடுப்போம் என்று சொல்கின்றார்கள். இதனால், வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை. வணிகர்களுக்கு என்று தனியாக ஒரு வங்கியை உருவாக்க வேண்டும். 60 வயதை கடந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இப்போது மறுஆய்வு செய்யும் முன் வணிகர்களின் கருத்து கேட்டு அதற்கேற்ப மறு ஆய்வு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மோடியை சந்தித்து தெரிவித்து இருக்கின்றோம்”

இவ்வாறு விக்கிரமராஜா பேசினார்.

Leave a Reply