பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இவ்வருடம் திருப்பூர், கோவை மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 8 லட்சத்து 86 ஆயிரம் மாணவர்-மாணவியர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இந்த தேர்வில் திருப்பூர் மாணவி பவித்ரா மற்று கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1,192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in. ஆகிய இணையதளங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றிஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும் பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், இணையதளங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 14 முதல் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். மே 18 முதல் மாணவர்கள் தாங்களாகவே இந்த மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகின்ற மே 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பள்ளிகளின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே 15 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற மொழி பாடங்களுக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மறு கூட்டல் செய்வதற்கு மொழி பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் வருகின்ற ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்காக வருகின்ற 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தோல்வியடையும் மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குனர் தெரிவித்து உள்ளார்.