இணைய சமநிலைக்கு எதிரானதாக அமைந்துள்ளது எனும் விமர்சனத்திற்கு இலக்கான இன்டெர் நெட். ஆர்க் ( internet.org) திட்டத்தில் டெவலப்பர்களுக்கும் பங்கேற்கலாம் என ஃபேஸ்புக் அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டத்தை மேலும் திறந்த நிலையில் செயல்படுத்தும் நோக்கத்துடன் ஃபேஸ்புக் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.
சமூக வலைப்பின்னல் சேவைகளில் முன்னணியில் திகழும் ஃபேஸ்புக், இணைய வசதி இல்லாதவர்களுக்கு அடிப்படை இணைய சேவைகளை இலவசமாக வழங்கும் இன்டெர்நெட்.ஆர்க் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்தி வருகிறது. இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகமானது.
இதனிடையே இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள், வாட்ஸ் அப் போன்ற சேவைகளுக்கு கட் டணம் வசூலிக்க அனுமதி கோரியதை அடுத்து, இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சம நிலைக்கு ஆதரவான போராட்டம் வெடித்தது. இணையதள பயன்பாட்டை தரம் பிரித்து கட்டுப்படுத்த முயலும் செயலுக்கு எதிராக இணையவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இணைய சமநிலைக்கு ஆதரவாக ட்ராய் அமைப்பிடம் பத்து லட்சம் பயனாளிகளுக்கு மேல் இமெயில் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு சில இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்கும் ஏர்டெல் ஜீரோ திட்டமும் கடுமையாக விமர் சிக்கப்பட்டது. இணையத்தை துண்டு போட முயலும் செயல் என்று கூறப்பட்டது. இதனிடயே ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்டெர்நெட்.ஆர்க் திட்டமும் இணைய சமநிலைக்கு எதிராக அமைந்திருக்கிறது எனும் விமர்சனத்திற்கு இலக்கானது. இணையத்தை பயன்படுத்தும் உரிமையை இணையவாசிகளுக்கு வழங் காமல் இலவசம் என்ற பெயரில் ஒரு சில இணையதளங்களை மட்டுமே வழங்குவது இணைய சமநிலை யை குலைக்கும் செயல் என வாதிடப்படுகிறது.
இந்த விவாதத்தை அடுத்து இந்தியாவில் ஃபேஸ்புக்குடன் கைகோர்த்திருந்த சில நிறுவனங்கள், இதில் இருந்து வெளியேறின. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் சர்ச்சைக்குரிய இன்டெர்நெட்.ஆர்க் திட்டத்தை டெவலப்பர்களுக்கு திறந்துவிடுவதாக இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஃபேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த திட்டத்தில் இணைய விரும்பும் இணையதள உரிமையாளர்கள், இன்டெர்நெட்.ஆர்க் சேவையில் தங்கள் இணையதளத்தை அல்லது சேவையை இடம்பெற வைக்கலாம். இதன் பொருள், ஃபேஸ்புக் தேர்வு செய்த இணையதளங்கள் மட்டும் அல்லாமல் மற்ற இணையதளங்களும் கூட இதில் பங்கேற்கலாம் என்பதாகும். தற்போது ஃபேஸ்புக்கும் 30 இணைய சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறது.
இணைய தளங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது மூலம் இந்த எண்ணிக்கையை உயர்த்தவும், தளங்களின் தேர்வை மேலும் திறந்த அணுகுமுறை கொண்டதாகவும் ஆக்கவும் ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
தனது இன்டெர்நெட்.ஆர்க் தளத்தை திறந்துவிட்டிருப்பதன் மூலம், இணைய சமநிலைக்கு எதிரான திட்டம் எனும் குற்றச்சாட்டில் இருந்து ஃபேஸ்புக் தப்பிக்க விரும்புவதாகவும் கருதலாம். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனர் தங்கள் திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது அல்ல என்று கூறியிருந்த நிலையில் ஃபேஸ்புக், ‘நீங்களும் வாங்க…!’ என்று அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் இணையும் தளங்கள் இன்டெர் நெட்.ஆர்க் திட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு உடன்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய தொலைபேசி போன்ற வசதிகளை பயன்படுத்தாத சேவையாகவும் இருக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது. ஒரு பகுதி இணையத்தை மட்டும் இலவசமாக வழங்குவது இணைய சமநிலைக்கு எதிரான தாகவே அமையும் என்று இணைய வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இணையத்தில் மேலும் பலரை இணையச்செய்யும் முயற்சி இது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இது ஃபேஸ்புக்கை மேலும் பலரிடம் கொண்டு செல்லும் முயற்சியே என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
இந்த பின்னணியில் இணையதளங்களுக்கு (டெவலப்பர்) அழைப்பு விடுத்திருப்பது மூலம் ஃபேஸ்புக் இணைய சமநிலைக்கு எதிரான திட்டம் என்ற தோற்றத்தை மாற்ற முயற்சிக்கிறது.
ஃபேஸ்புக்கின் இன்ட்நெர்ட்.ஆர்க் திட்ட அறிவிப்பு: http://newsroom.fb.com/news/2015/05/announcing-the-internet-org-platform/
இன்டெர்நெட்.ஆர்க் இணையதளம்: http://www.internet.org/platform