இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குட்டி இளவரசி பிறந்தார். ராஜ வம்சத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு சார்லோட் எலிசபத் டயானா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், அவர் அனைவராலும் இளவரசி சார்லோட் என்று அழைக்கப்படுவார் எனவும் இங்கிலாந்து அரண்மனை வட்டாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அரண்மனை வட்டாரத்தை கிண்டல் செய்யும் வகையில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா நிர்வாகிகள் இங்கிலாந்து இளவரசி பிறந்த அதே நாளில் பிறந்த குரங்குக்குட்டி ஒன்றுக்கு சார்லோட் என்ற பெயரை வைத்துள்ளனர்.
இங்கிலாந்தின் குட்டி இளவரசியின் பெயரை குரங்கு குட்டிக்கு சூட்டுவதா? என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா நிர்வாகிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது, “இந்த பெயர் நாங்கள் சூட்டிய பெயர் அல்ல என்றும் தங்கள் உயிரியல் பூங்காவின் வழக்கப்படி, இங்கு பிறக்கும் குரங்குகளுக்கு பொது மக்கள்தான் பெயர் சூட்டுவார்கள் என்றும் அந்த வகையில், இந்த குட்டிக்கு சாரலோட் என பெயர் வைக்கலாம் என அதிக மக்கள் கருத்து தெரிவித்ததால் அந்த பெயரை வைத்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த விளக்கத்திற்கு பின்பும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி உயிரியல் பூங்கா அதிகாரிகள் குரங்குக்குட்டியின் பெயரை மாற்ற முடிவு செய்தனர். மேலும் சாரலோட் என்ற பெயரை குரங்குக்குட்டிக்கு வைத்ததற்காக மன்னிப்பும் பூங்கா நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.