கடுமையான குற்றங்கள் செய்யும் சிறுவர்களின் வயது வரம்பை 18ல் இருந்து 16ஆக குறைக்க கடந்த சில மாதங்களாக மத்திய அரசு முயற்சி செய்து வந்த நிலையில் இதுகுறித்த மசோதா ஒன்று நேற்று நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக திருட்டு, கொலை, கொள்ளை, மட்டுமின்றி பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களை செய்யும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக ஈடுபடுவதாக வந்த புள்ளிவிபரத்தால் டெல்லி உயர்நீதிமன்றம் தனது கவலையை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிறார்கள் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேனகா காந்தி தாக்கல் செய்த மசோதா மீது விவாதம் நடைபெற்ற்று அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின் படி 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் இளைஞர்களாக கருதப்பட்டு, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும். மேலும், குற்றத்தின் தன்மை அடிப்படையில் 16 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் சிறார்களா அல்லது இளைஞரா என்பது குறித்து சிறார்கள் நீதி முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. கொடிய குற்றங்களை செய்துவிட்டு, அவர்கள் 18 வயதுக்கு குறைவானர்கள் என்ற காரணத்தை காட்டி இனிமேல் யாரும் தப்பிக்க முடியாதவாறு இந்த மசோதா அமைந்துள்ளதாக பலர் கருத்து கூறியுள்ளனர்.