முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மற்றும், மத்திய மாநில உளவுத்துறை அதி காரிகள் ஆகியவர்களுடன் ஏராளமான பத்திரிகையாளர்களும் பெங்களூரு உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதுஇ கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை எழுத வேண்டிய பணியிருந்ததால் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் நீதிமன்ற ஊழியர்களுடன் தீர்ப்பு எழுதும் பணியில் தொடர்ந்து இருந்ததாகவும், தற்போது தீர்ப்பு எழுதும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து தீர்ப்பை சரிப்பார்க்கும் பணியும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தீர்ப்பு எழுதும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் நீதிபதி குமாரசாமி இன்று காலை இது தொடர்பான தகவலை நீதிமன்ற பதிவாளருக்கு தெரிவிப்பார் என்றும்அதனை தொடர்ந்து பதிவாளர் இன்று பிற்பகலில் தீர்ப்பு தேதியை முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக மே 11ஆம் தேதியோ அல்லது மே 12ஆம் தேதியோ தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.