கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, டிவி பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும்.
கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சியை தரும். தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல் நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.
உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும். வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக காணப்படும். அதற்கு சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக்கொண்டு இமையின் மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும்.
பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கண்களின் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டி அதனை கண்களின் மேல் வைத்து ஒற்றி எடுக்கவும். இதனால் கண்கள் புத்துணர்ச்சி பெறும். கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப்பழம் பயன்படுகிறது.
சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியால் சுற்றி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒருநாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர வேண்டும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.