பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு. மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்ட மாவோயிஸ்டுகள்

pmபிரதமர் நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கர் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவோயிஸ்டுகள் சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டி போட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜவங்கா என்ற இடத்துக்கு சென்று, அங்குள்ள 700 பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். மேலும், டில்மிலி என்ற இடத்தில் ரூ.1,800 கோடி செலவில் உருவாக இருக்கும் உருக்கு ஆலைக்கான ஒப்பந்தம், ராவ்காட்–ஜக்தால்பூர் இடையே ரூ.140 கோடி செலவில் அமைக்கப்படும் ரெயில்பாதை திட்டத்துக்கான ஒப்பந்தம் ஆகியவை பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியுடன் சத்தீஸ்கார் மாநில முதலமைச்சர் ராமன் சிங்கும் கலந்து கொள்ள இருக்கின்றார்.

இந்நிலையில், மோடியின் வருகைக்கு மாவோயிஸ்டுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். மாவோயிஸ்டுகள் பஸ்தார் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாள் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பிரதமர் வரும் பாதையான கோண்டே என்ற கிராமத்தில் சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டு சாலையை மறித்துள்ளனர். பிரதமரின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க கோரும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்  மற்றும் பேனர்களும் அந்த இடத்தில் மாவோயிஸ்டுகள் கட்டியுள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே இருந்த மரங்களை அகற்றியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளனர். மேலும், ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களை ஒட்டிய எல்லைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக சத்தீஷ்கர் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply