சந்தானம் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ள திரைப்படம் ‘இனிமே இப்படித்தான்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், சந்தானம் ஆகியோர்கள் நகைச்சுவையுடன் பேசி விழாவை நகைச்சுவை பாதையில் கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில் சந்தானத்தை அறிமுகப்படுத்திய நடிகர் சிம்பு மிகவும் உருக்கமாக பேசியதால் விழா மேடையே ஒருவித இறுக்கத்தால் அமைதியானது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சிம்பு பேசியதாவது: ‘‘மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன். சந்தானம் இந்தளவுக்கு வளர்ச்சி பெற, அவரது திறமைதான் காரணம். திறமையில்லாத என்னை உருவாக்கி காட்டியவர் எனது தந்தை. எனது தந்தைதான் என்னை இந்தளவுக்கு உருவாக்கி தந்துள்ளார்.
நான் நடித்த படம் வெளியாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டரை ஆண்டுகளில், நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஆன்மிகம் பக்கம் நான் திரும்பி விட்டதாக கூறினர்.. கடவுளைத் தேடித்தானே போனேன். ‘பிகரை’ தேடிப்போகவில்லையே. என்னை கஷ்டம் இல்லாமல் வளர்ந்தவர் என்று அனைவரும் சொல்வார்கள். சாதாரண மனிதனின் கஷ்டம் எப்படி இருக்கும்? என்பதை இந்த இரண்டரை வருடத்தில் நானும் கற்றுக் கொண்டேன்.
கடந்த இரண்டரை வருடங்களில் என்னை விட்டு எல்லாமே போய் விட்டது. நான் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் அம்மாவிடம் கொண்டு போய்தான் கொடுப்பேன். இப்போது, செலவுக்கு அம்மாவிடம் போய் காசு கேட்கும் நிலையில் நான் இருக்கிறேன். அம்மாவிடம் காசு கேட்க கஷ்டமாக இருக்கிறது.என்னை விட்டு படம் போய் விட்டது. பணமும் போய் விட்டது.
சரி, நமக்காக ஒரு பெண் இருக்கிறார். கடைசிவரை அந்த காதலி நம்முடன் இருப்பாள் என்று நினைத்தேன். அவரும் போய் விட்டார். கல்யாணமாகி குழந்தை பிறந்து அதன் சிரிப்பை பார்த்தாவது கஷ்டம் போய்விடும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல் கடவுள் என்னை ரொம்பவே சோதித்து விட்டார்.
இப்போது என்னிடம் உயிர் மட்டும்தான் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உயிர் இருக்கிறது. கடந்த மே 9-ந் தேதி வெளியாக இருந்த ‘வாலு’ படம் வெளியாகவில்லை. என்னடா இது, கடவுள் நம்மை கைவிட்டு விட்டாரே என்று நினைத்தேன். இப்போது அந்த படத்தை என் அப்பா வாங்கி வெளியிட இருக்கிறார்.”
இவ்வாறு நடிகர் சிம்பு பேசினார்.