தஞ்சாவூர்: நூறு ஆண்டுகளுக்கு பின், தஞ்சை பெரிய கோவில் நந்தி பெருமானுக்கு, 250 கிலோ சந்தனத்தால், நாளை அலங்காரம் செய்யப்படுகிறது. தென்கயிலாயம் என, போற்றப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கி.பி., 1010ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு, சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில், பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, நாயக்க மன்னர்களின் ஆட்சியிலும் விழாக்களை நடத்தி வந்தனர். கடந்த, 16ம் நூற்றாண்டில், நாயக்க மன்னர்கள், தஞ்சை பெரிய கோவில் முன், 13 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய நந்தியம்பெருமான் சிலையை அமைத்தனர். இந்த பெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடத்தினர். காலபோக்கில், நந்திபெருமானுக்கு நடத்திய சந்தனகாப்பு அலங்காரம் தடைப்பட்டது.
கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், சந்தனகாப்பு அலங்காரம் நடந்தாக, சில ஆவணங்களில் காணப்படுகிறது. அதே போல், நாளை (12ம் தேதி) நந்திபெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து சென்னை, வேங்கடராமசுவாமி சீடர்கள் சந்தனம் அரைக்கும் பணி மேற்கொள்கின்றனர். வனத்துறையினர் முன் அனுமதி பெற்று வாங்கிய சந்தன கட்டைகளை அரைக்கும் பணி, சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, மேலூர், கோவை ஆகிய இடங்களில் நடக்கிறது. தஞ்சையில், பெரிய கோவில் அம்மன்சன்னதி, கருவூரார் சன்னதி, திருமால் பத்தி ஆகிய இடங்களிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் என, நான்கு இடங்களில் சந்தனம் அரைக்கப்படுகிறது. வேங்கடராமசுவாமி சீடர்கள் மட்டும் இன்றி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சந்தனத்தை அரைத்து கொடுக்கின்றனர்.
இதற்காக சந்தன கட்டைகள், சந்தனம் அரைக்கும் கற்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 250 கிலோ எடையில், தஞ்சை பெரிய கோவில் நந்தியம் பெருமானுக்கு சந்தனம் சாத்தப்படவுள்ளது. இன்று இரவு அலங்காரம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாளை காலை நந்தியம்பெருன் சந்தன அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமணி, வேங்கடராமசுவாமி சீடர்கள் செய்து வருகின்றனர்.