நேபாளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் 7.4 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களிலும் இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் வசித்து வரும் மக்கள் நிலநடுக்கத்தின் காரணமாக பீதியுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருவில் தஞ்சமடைந்தனர். இந்த நில அதிர்வால் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பீகார் மாநிலத்தில் மிக அதிகமாக நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வட மாநிலங்களை அடுத்து சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் உறுதி செய்கின்றன. ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம், நந்தனம் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதன் காரணமாக அடுக்கு மாடியில் செயல்பட்டு வந்த பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து கூச்சல் போட்டு கொண்டே படி வழியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அங்கு பணியாற்றும் தனியார் நிறுவன ஊழியர் தினேஷ் என்பவர் கூறியதாவது: கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டு இருந்தோம். திடீரென சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த போர்டு, தண்ணீர் பாட்டில் போன்றவை நகர்வதை உணர முடிந்தது. சிறிது நேரத்தில் லேசான தலைச்சுற்றலும் ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக நாங்கள் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடிவிட்டோம்’ என்று கூறினார். இதனால் சென்னையில் ஒருசில பகுதிகள் பெரும் பரபரப்புடன் இருந்து வருகிறது.