எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும். மேக்அப் போடாமலேயே சருமம் பளிச்சென மின்ன வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? சருமத்தை சரிவர பராமரிக்க சின்ன மெனக்கெடல் போதும். நாம் எதிர்பார்க்கும் அழகை பெறலாம்.
சருமத்துக்கு வெள்ளை நிறத்தை கொடுப்பது மெலனின் அளவே தவிர, ஆரோக்கியத்தின் அளவு இல்லை. அளவான ஈரப்பதமும், பளபளப்பான தோற்றமும், பரு, மரு, கரும்புள்ளிகள், சுருக்கங்கள் இல்லாத சீரான சருமமே ஆரோக்கியத்தின் அடையாளம்.
* சன்ஸ்கிரீன் – 6 கட்டளைகள்
1. காற்றில் படர்ந்திருக்கும் மாசுப்படிந்த தூசு, வெயிலின் தாக்கம், வீட்டில் பயன்படுத்தப்படும் டிவி, ஸ்மார்ட்போன், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் போன்ற அனைத்தின் கதிர்வீச்சுகளாலும் முதலில் பாதிப்பது சருமம்தான். எனவே, வெளியில் சென்றாலும், வெயிலில் சென்றாலும், வீட்டிலே இருந்தாலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
2. வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்க்ரீன் பூசவேண்டும்.
3. சன் ஸ்கிரீனில் Spf 15, 25, 30 அளவில் விற்கப்படுகிறது. Spf 15 – 150 நிமிடங்கள், Spf 25 – 250 நிமிடங்கள், Spf 30 – 300 நிமிடங்கள் வரை கதிர்வீச்சுகளிடமிருந்து பாதுகாப்பு தருகிறது. அனைத்து சருமத்தினருக்கும் சிறந்தது Spf 25 சன்ஸ்கிரீன்தான்.
4. வறண்ட சருமத்துக்கு கிரீம் வடிவிலும் (cream based), எண்ணெய் மற்றும் பருக்கள் சருமத்துக்கு தண்ணீர் வடிவிலும் (water based), கருமை நிறத்தவருக்கு ஜெல் வடிவிலும் (gel based) சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
5. ஒரு நாளைக்கு 3 முறை சன் ஸ்கிரீன் பூசலாம். ஒருமுறை பயன்படுத்தி, மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு நீரால் கழுவி விட்டு பூசவேண்டும். வெளியில் இருப்பவர்கள், ஈர டிஷ்ஷூவால் துடைத்து விட்டு சன் ஸ்கிரீன் பூசிக் கொள்ளலாம்.
6. நிழலில் பயணிப்பதே நல்லது. காலை 10 முதல் மாலை 3 மணி வரை கொளுத்தும் சூரியனிடமிருந்து தப்பிக்க குடை, ஸ்கார்ப், கை மற்றும் கால் உறைகள், தொப்பி போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.
* மாய்சுரைசர் – 6 கட்டளைகள்
1. வறண்ட சருமத்தினருக்கு மாய்சுரைசர் க்ரீம் அவசியம். எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்தினர் மாய்சுரைசர் பயன்படுத்தினால், மேலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
2. நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறண்டு, சுருக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே, இவர்கள் இரவில் மாய்சுரைசர் கிரீம் பயன்படுத்தலாம்.
3. இளம் வயதிலேயே வறண்ட சருமம் இருந்தால் மாய்சுரைசர் பயன்படுத்தலாம்.
4. முகம் மட்டும் இல்லாமல் கண்ணுக்கு கீழும் மாய்சுரைசர் தடவலாம்.
5. ஆலுவேரா, யாலுரோனிக் அமிலம் (hyaluronic acid), ஸ்கொலின் (squalene) போன்ற நைட் கிரீம்களை பயன்படுத்தலாம்.
6. எந்த கிரீம் பயன்படுத்துவதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
* அழகான சருமம் – 4 சிகிச்சைகள்
எலாஸ்டின், கொலஜென் போன்ற புரதங்களும், ஈரப்பதத்தை பாதுகாக்க, யாலுரோனிக் அமிலமும் (hyaluronic acid) குறையும்போதும் சருமம் பாதிக்கிறது. சரும சிகிச்சைகள் மூலம் இழந்த ஈரப்பதத்தையும், அழகையும் மீட்டெடுக்கலாம்.
1. ப்ளூ லைட் (Blue light)
முகம் முழுவதும் எல்.இ.டி (LED) லைட்டை பாய்ச்சி செய்யப்படும் ப்ளு லைட் சிகிச்சை, முகப்பரு, முக சுருக்கங்களை போக்கும். எல்லா வயதினரும் இந்த சிகிச்சை செய்துக் கொள்ளலாம். சருமம் தளராமல் பாதுகாக்கப்படும். மூப்படைதல் தாமதமாகும். பரு தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.
2. ஐயன்டோபோரோசிஸ் (Iontophoresis)
சருமத்தை அழகாக பராமரிக்க செய்யப்படும், பிசியோதெரபி போன்ற சிகிச்சை இது. வைட்டமின் சி மற்றும் ஈரப்பதத்தை தரும் அமிலங்களால் இந்த சிகிச்சை செய்யப்படும். இதனால் சருமம் புதுப்பிக்கப்பட்டு, எண்ணெய் வடிதல், பரு போன்ற பிரச்னைகள் வராது.
3. பீலிங் (Peeling)
பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட கெமிக்கல்களை முகத்தில் பூசி செய்யப்படும் சிகிச்சை பீலிங். அனைத்து வயதினரும் செய்து கொள்ளலாம். பீலிங் செய்வதால், வயதாவதை தாமதப்படுத்தவும், வயதான தோற்றம் வராமல் பராமரிக்கவும் முடியும். சுருக்கங்கள் நீங்கும். தளர்வுகளும் குணமாகும். கண்கள், கன்னம், மூக்கு ஒரங்கள், நெற்றி பகுதிகளில் தெரியும் சுருக்கங்கள் மறையும். பளிச்சென அழகு பிரகாசிக்கும்.
4. ரேடியோ ப்ரீக்வொன்சி டைட்னிங் (Tightening)
தளர்வடைந்த சருமத்தை டைட்டாக்கும் சிகிச்சை இது. எலாஸ்டின், கொலஜென் போன்ற புரதங்கள் இந்த சிகிச்சையால் புதுப்பித்துக் கொள்ளும். நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்களுக்கு இந்த சிகிச்சை சிறந்த தேர்வு.
குறிப்புகள்:
* யார் யாருக்கு எந்த சிகிச்சை பொருந்தும், எத்தனை முறை செய்துக் கொள்ளவேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். சிகிச்சைக்கான செலவுகள் ரூ.1500 லிருந்து தொடங்குகிறது.
* பெரும்பாலான சிகிச்சைகளுக்கு 10-20 நிமிடங்களே ஆகும். இதை, ‘ஆபீஸ் ப்ரொசிஜர்’ என அழைப்பர். அதாவது, அலுவலகத்தின் லஞ்ச் டைம்மில் கூட, சிகிச்சை செய்துக் கொள்ளலாம். சருமத்தை பராமரிக்கலாம்.
* ஒருநாளைக்கு மூன்று முறை பேஸ்வாஷ் பயன்படுத்தி முகம் கழுவலாம்.
* ஆல்கலின் மற்றும் அசிடிக், இந்த இரண்டும் சமமாக இருக்கும் பேஸ்வாஷ் சிறந்தது. அதன் அளவு பி.எச். நியூட்ரல் (pH neutral) 5.5.
* வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகளே சிறந்தது.
* 6-7 மணி நேர ஆழ்ந்த தூக்கம் சருமத்துக்கு அவசியம்.