கேப்டன் விஜயகாந்த் நடித்த வெற்றிப்படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படம் என்றால் அது ‘ரமணா’ என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் கடந்த 1 ஆம் தேதி இந்தியில் ‘கப்பார் இஸ் பேக்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆனது
ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.4 கோடியும், இதுவரை ரூ.87 கோடிக்கும் மேலும் வசூல் செய்துள்ள இந்த திரைப்படம் இவ்வார இறுதிக்குள் ரூ.100 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் இந்த படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். கப்பார் இஸ் பேக் திரைப்படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வரின் வாழ்த்து படக்குழுவினர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நிஜ நாயகனாக விளங்கி வரும் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இந்த படம் பிடித்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.