சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த ஒரு உத்தரவில், டெல்லி முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக தவறான செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் அவதூறு வழக்குத் தொடரலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு பெரும்பாலான ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் முதல்வரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும், மூத்த வழக்கறிஞருமான அமித் சிபல் டெல்லி முதல்வரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா பி பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் டெல்லி அரசு இதுபோன்ற உத்தரவை ஏன் பிறப்பித்தது என்பது குறித்து இன்னும் 6 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த இடைக்கால தடைக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டில்லி காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜய் மாக்கன் “இந்த உத்தரவின் மூலம் கேஜரிவால் ஊடகங்களை மட்டுமல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார். இது கருத்து சுதந்திரத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது. இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.