காரணங்கள்
1. மூளைக்கு போதிய இரத்தம் பாயாதது. மூளைக்கு ஒட்சிசன் போதாதது.
2. காதின் உட்புறம், முதுகெலும்பு (தண்டுவடம்), மூளையில் ஒரு பகுதியான செரிபெல்லம், இவற்றில் ஏற்படும் பாதிப்புகள். காதில் தொற்றுநோய் ஏற்பட்டு சீழ் வடிவதாலும் நிலை தடுமாற்றம் உண்டாகும். மூளையில் கட்டி, வீக்கம் இருந்தாலும் தலை சுற்றல் ஏற்படும்.
3. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய படபடப்பு, ஒற்றை தலைவலி இவைகளும் தலை சுற்றலை உண்டாக்கும்.
4. ‘செர்விகல் ஸ்பான்டிலோஸிஸ்’ -Cervical Spondylosis- தலைச் சுற்றலை உண்டாக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும்.
5. சில அலோபதி மருந்துகள் (ஆஸ்பிரின், குளோரோக்வின் போன்ற) காரணமாகலாம்.
6. உடலின் நீர்மச்சத்துக்கள் குறைந்து விட்டாலும், களைப்பு, தைராய்டு சுரப்பி குறைபாடுகளாலும் ஏற்படலாம்.
7. வயிற்றுக் கோளாறுகள், பார்வை கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் இவற்றாலும் தலை சுற்றல் ஏற்படலாம்.
8. பித்தம் அதிகமானால் (பித்தாதிக்கத்தினால்) தலைச்சுற்றல் உண்டாகலாம்.
வீட்டு வைத்தியம்:
1. பாதாம் பருப்புகள் 7 / 8 எடுத்து அவற்றை 7 / 8 பரங்கி விதைகள், ஒரு தேக்கரண்டி கசகசா மூன்று மேஜை கரண்டி கோதுமை இவற்றுடன் கலந்து தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் பாதாம் பருப்புகளின் தோலை நீக்கி விட்டு, எல்லாவற்றையும் நன்றாக, கூழாக அரைத்துக் கொள்ளவும். தனியாக 2 தேக்கரண்டி நெய்யில் 1/2 தேக்கரண்டி கிராம்பை போட்டு வறுக்கவும். இதனுடன் மேற்சொன்ன கூழை சேர்த்து சிறிது பால் விட்டு காய்ச்சவும். இந்த கலவையை சர்க்கரை சேர்த்து தினசரி சில நாட்களுக்கு குடித்து வரவும்.
2. தனியா, 5 கிராம், நெல்லிமுள்ளி (உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகள்), 5 கிராம் இவற்றை இரவில் ஊற வைத்து காலையில் வடிகட்டி சர்க்கரை சேர்த்து பருகவும். கொத்தமல்லி சாறும் நல்லது. கொத்தமல்லி சாற்றுடன் தேன் அல்லது மோர் கலந்து குடிக்கலாம்.
3. இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, சட்டியில் இட்டு வடிகட்டவும். நன்கு வதக்கிய பின் கொஞ்சம் தேனைச் சேர்த்து, வதக்கி, கொஞ்சம் நீரையும் சேர்த்து, சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் தினமும் 2 லிருந்து 3 வேளை குடித்து வந்தால் தலைச்சுற்றல் நிற்கும்.
4. அஜீரணத்தால் வரும் தலைச்சுற்றலுக்கு சுக்கு, தனியா, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரை குடிப்பது நல்லது.