வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா: குவிந்த பக்தர்கள்!

GW430

தேனி: தேனி மாவட்டத்தில் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தேனி மாவட்டத்தில் பகலில் மழை காரணமாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது பாதிக்கப்படுகிறது. இதனால் நேற்று அதிகாலையிலேயே கோயிலில் பக்தர்கள் அதிகளவில் அம்மனை தரிசிக்க வந்தனர். காலை 5 முதல் 7 மணி வரை கூட்டம் அதிகளவில் இருந்தது. அதிகளவில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர் ஒருவர் பறவை காவடி எடுத்துவந்தார். வீரபாண்டியில் ராட்டினங்களுக்கு உறுதி தன்மை சான்று பெற்ற பின்னர் தொடர்ந்து மழை பெய்வதால், மண் தரையில் சகதி அதிகரித்து, ராட்டினங்கள் உட்பட எல்லா அமைப்புகளும் வலுவிழந்து இருக்கும். எனவே மீண்டும் உறுதி தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என போலீசார் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தவிர தொடர் மழையால் ராட்டினங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாலை, இரவு நேரங்களில் மழையால் கூட்டம் குறைவாக இருப்பதால் ராட்டினங்களை வைத்தவர்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். பெண் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். நாகர் சிலைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சிலர் காவடி எடுத்தும் வழிபட்டனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முல்லையாற்றில் நீராடிய பக்தர்கள் அம்மனை வழிபட்ட தங்கள் நேர்த்திக்கடனை முடித்தனர். பக்தர்களின் பாதுகாப்பு பணியில் போலீசார் இரவுபகலாக ஈடுபட்டுவருகின்றனர்.

Leave a Reply