திருவாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்!

valeeswar

மாமல்லபுரம்: கூவத்துார், திருவாலீஸ்வரர் கோவிலில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கூவத்துாரில், திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், மாமல்லபுரத்தில் செயல்பட்டு வரும் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிர்வாகம், இக்கோவிலை நிர்வகித்து வருகிறது.

குழந்தை பாக்கியம்: ராமாயண சுக்ரீவனின் சகோதரர் வாலி, இக்கோவில் இறைவனை வழிபட்டதால், இறைவன் திருவாலீஸ்வரராக விளங்குகிறார். கூவத்துார், கிழக்கு கடற்கரை சாலை அருகில், 1 ஏக்கர் பரப்பளவில், இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலில், சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருக்கின்றனர். இக்கோவிலின் லிங்கம், பிற கோவில்களில் இருந்து வித்தியாசப்பட்டு, 16 பட்டைகளுடன் உள்ளது; பிற கோவில்களில், இறைவனுக்கு வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் முருகர் வீற்றிருக்க, இங்கு இருவரும் வலதுபுறமே

வீற்றிருப்பது சிறப்பு
: கோவில் தீர்த்தகுளத்தில் நீராடி, ஈர ஆடையுடன், இறைவன் மற்றும் அம்பாளை, 21 சுற்றுகள் வலம் வந்தால், மகப்பேறு பாக்கியம் கிடைக்கும் என்பதும்; இங்கு வழிபடுபவர்கள், எதிரி தொல்லைகளிலிருந்து விடுபடுவர் என்பதும் ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில், 1937ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்பின்றி, 78 ஆண்டுகளாக, பெயரளவிற்கே வழிபாடு நடந்தது. இந்நிலையில், கூவத்துாரைச் சேர்ந்த பக்தரின் முயற்சியால், திருப்பணிகளுக்காக, திருக்கோவில் ஆணையர் பொது நிதி, 14.20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1.5 கோடி ரூபாய் மதிப்பில், இப்பணியை திட்டமிட்டு, பக்தர் ஒருவரின் சொந்த நிதி மூலம், அதே ஆண்டு பணி துவக்கப்பட்டது.

90 சதவீத பணிகள்: தற்போது, சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டு, அனைத்திற்கும் புதிதாக விமானம்; நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு, அலங்கார மண்டபம்; புதிதாக, ஐந்து நிலை ராஜகோபுரம்; சுற்றுச்சுவர் என, திருப்பணிகள் செய்யப்பட்டு, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இதுகுறித்து, திருப்பணிகள் குழுவினர் கூறுகையில், இரு ஆண்டுகளுக்கு முன், திருப்பணிகள் துவக்கப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது. வரும் ஜூலை மாதம், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Leave a Reply