மத்திய அரசின் குழந்தை தொழிலாளர் சட்டத் திருத்தம். வைகோ, அன்புமணி எதிர்ப்பு

child labourகுழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், விளையாட்டுத்துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள அனுமதிக்கும் வகையில்குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இந்த சட்ட திருத்தத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டதிருத்தம் குறித்து கருத்து கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “குடும்பப் பாரம்பரிய தொழில்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பெற்றோர்கள் சட்டபூர்வ உரிமையாகக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருவது, ராஜாஜி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட குலக்கல்வித் திட்டத்தைத்தான் நினைவூட்டுகிறது. ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போர்க்கோலம் பூண்டதன் விளைவாக, ராஜாஜி முதல்வர் பதவியை விட்டு வெளியேறியதும், பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றதும் வரலாற்றில் மறக்க முடியாதவை. எனவே, மத்திய அரசு குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, “குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மாறாக ஊக்குவிக்கும் தன்மை கொண்டவையாகும். ஆபத்தான இம்முடிவை அரசு கைவிட வேண்டும். இன்றைய காலத்தில் பள்ளிகளில் விளையாட்டு என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. எனவே பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் ஓய்வு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் விளையாடுவது தவிர்க்க முடியாதது ஆகும். அவ்வாறு இருக்கும்போது பள்ளியில் இருந்து திரும்பிய பின்னர் விளையாடி, கடுமையாக வேலை செய்துவிட்டு, அதன்பின் வீட்டுப்பாடங்களை செய்யும் போது இயல்பாகவே படிப்பு மீது குழந்தைகளுக்கு கோபமும், வெறுப்பும் ஏற்படும். இதனால் குழந்தைகள் ஒருகட்டத்தில் படிப்பை நிறுத்திவிட்டு பணி செய்யத் தொடங்கி விடுவார்கள். அறிவார்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  மத்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு  இச்சட்டத்திருத்தம் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.

மேலும் பல கட்சியின் தலைவர்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply