ஒரு முதல்வராகவும், அரசியல் கட்சியின் தலைவராகவும் அரசியல் நெறிகள் குறித்து எனக்கு நன்றாக தெரியும். இதை யாரும் எனக்கு கற்றுத்தர வேண்டாம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பும், மோடி பிரதமர் ஆன பின்பும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் மோடியுடன் சமரசம் செய்து கொண்டதாக மேற்குவங்க எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சமீபத்தில் மேற்கு வங்கத்தின் பர்ன்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றதை அடுத்து மோடியை மம்தா தனியாகவும் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மேற்குவங்க காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ கட்சிகள் கருத்து தெரிவித்தபோது, “மோடி-மம்தாவின் சந்திப்பு அரசியல் சுயலாபத்துக்கானது என்று விமர்சித்தன.
இதற்கு பதிலளித்து பேசிய மம்தா பானர்ஜி ”நவீனமயமாக்கப்பட்ட இஸ்கோ உருக்காலைத் திட்டத்தைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்துக்கு வந்தார். அதற்கான இடம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். ஒருவேளை அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றால், எனக்கு மரியாதை தெரியவில்லை என்று சிலர் கூறி இருப்பார்கள்.
அரசியல் நெறிகள் குறித்து எனக்கு யாரும் கற்றுத்தர வேண்டாம். மாணவப் பருவத்திலிருந்தே நான் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். மேற்கு வங்கத்தில் வரவிருக்கின்ற தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைத் தேடவேண்டிய நிலை ஏற்படும். அவர்களைத் தோல்வி அடையச் செய்து தக்க பதிலடி கொடுப்போம்” என்று ஆவேசமாக பேசினார்.