சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலைக்கு பாஜக வாழ்த்து தெரிவித்திருப்பது, ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகம் செழிப்பாக இருக்கும் என கருத்து கூறுவது ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதையே காட்டுவதாக பாமக எம்.பி.அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி. அன்புமணி ராமதாஸ் அந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, “தமிழக அரசை தமிழிசை செளந்திரராஜன் உள்பட பாஜக தலைவர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், திடீரென ஜெயலலிதா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதையே காட்டுகிறது.
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்ய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவிடம் பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில அரசு மேல்முறையீடு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறினார்.