சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை அடுத்த வாரம் ஏற்பார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, “ஜெயலலிதா வழக்கு தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின்பு தான் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்”. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு. இதனால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம்.
இதுகுறித்து அட்வகேட் ஜெனரல், அரசு சிறப்பு வழக்கறிஞர், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். அதற்கு பின்பு தான் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்க்கள் கூட்டம் வரும் 22 ஆம் தேதி சென்னையில் கூடவிருக்கின்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ஜெயலலிதா 23 அல்லது 24ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.