42 வருடங்களாக கோமாவில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக் என்பவர் மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் இன்று காலமானார். கடைசி வரை அவருக்கு நினைவு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1973 ஆம் ஆண்டு, நவம்பர் 27-ந் தேதி மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்தபோது, வார்டு பாய் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அருணாவின் முளை செயலிழந்தது. இதையடுத்து கே.இ.எம். மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அருணா, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். பல வருடங்களாக அவருக்கு நினைவு திரும்பாததால், கடந்த 2011 ஆம் ஆண்டு அருணாவை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தில் எழுத்தாளர் பிங்கி விரானி என்பவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் கருணை கொலை செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதிக்கவில்லை.
அருணாவுக்கு ஆதரவாக இருந்த அவருடைய சகோதரியும் நாயக் அவர்களும் கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார். இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அருணாவின் உடல்நிலை திடீரென மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவம் செய்யப்பட்டது. எனினும் சிறிது நாளில் அவரது உடல்நிலை மீண்டும் தேறியது. ஆகையால் மீண்டும் சாதாரண வார்டுக்கு அருணா மாற்றப்பட்டார். அவரை மருத்துவமனை நிர்வாகிகளும், ஊழியர்களும் சிரத்தை எடுத்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. மருத்துவர்கள் வெண்டிலேட்டர் வைத்து அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் மரணமடைந்தார். ஏறத்தாழ 42 ஆண்டுகாலம் கோமாவில் இருந்த அருணாவுக்கு என்றாவது நினைவு திரும்பும் என்று எதிர்பார்த்த நிலையில், நினைவு திரும்பாமலேயே இன்று அவரது உயிர் பிரிந்தது..